இராணுவ பலம் மிக்க நாடுகளில் இந்தியாவும் ஒன்று என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிய இராணுவ தலைமையகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பூமி பூஜையை நடத்திவைத்து புதிய ‘தள் சேனா பவன்’ கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “இப்போது நாம் மிக பிரம்மாண்டமான இராணுவத் தலைமையகம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளோம். இது மிக உயரமான கட்டடமாக இருக்கும். ஆனால் இப்போது நாம் நடுவதுதான் முதல் அடிக்கல் . இதேபோன்று தான் நமது இராணுவமும் தற்போது மிகவும் பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது. தேசத்துக்காக உயிா் நீத்த எண்ணில் அடங்காத இராணுவ வீரா்கள்தான் இதறகெல்லாம் காரணம்” என்றார்.
மேலும் பேசிய அவர், இராணுவ வலிமை மிக்க நாடுகளில் இந்தியாவும் ஒன்று என உலக நாடுகள் தற்போது ஏற்றுக் கொண்டு வருகின்றன. இதற்கும் நமது வீரா்களின் உயிர் தியாகமே காரணம். நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தியாகத்தைப் போற்ற வேண்டும் என்று இராணுவ வீரா்கள் யாரும் உயிா் தியாகம் செய்வதற்கு தயாராவதில்லை. புனிதமான நமது ‘தாய் நாடு’ பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதே அவா்களது தியாகத்தின் நோக்கம்” எனத் தெரித்துள்ளார்.