சுருக்கு கம்பி வலையை வைத்து மானை வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு சமயபுரம் என்ற பகுதியில் இருக்கும் வீடுகளில் 4 பேர் மான் கறி சமைப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனச்சரக அதிகாரி பழனி ராஜா தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியபோது, மான் இறைச்சியை அந்த வீடுகளில் 4 பேர் சமைத்து கொண்டிருப்பதை பார்த்துள்ளனர்.
இதனையடுத்து அந்த நான்கு பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் சமயபுரம் பகுதியில் வசிக்கும் நாகலிங்கம், பழனிச்சாமி, மணி, செல்வராஜ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் நெல்லி மலை காப்புக்காடு சமயபுரம் வனப்பகுதியில் சுருக்கு கம்பியில் வைத்து மானை வேட்டையாடி உள்ளனர். இதனையடுத்து இந்த நான்கு பேரையும் வனத்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த சுருக்கு கம்பி வலை, மான் இறைச்சி போன்றவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.