மருத்துவமனைகளில் இருந்து பச்சிளம் குழந்தைகளைத் திருடி சென்ற பெண்ணுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சவூதி அரேபியாவில் 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி மற்றும் செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி லத்தீப் மருத்துவமனையிலும் 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனை ஒன்றிலும் மரியம் என்ற பெண் செவிலியர் வேடமிட்டு மூன்று ஆண் குழந்தைகளை திருடியுள்ளார். ஒரு குழந்தையின் பெயரை மட்டும் கணவரின் அனுமதியுடன் குடும்ப அட்டையில் இணைத்த நிலையில் மற்ற இரண்டு குழந்தைகளின் பெயரை குடும்ப அட்டையில் இணைப்பதற்கு மரியமின் இரண்டாவது கணவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அரசாங்கத்திடம் தனது மகன்களுக்கு அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்தார்.
ஆனால் அவர் சமர்ப்பித்த தகவலில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள தொடங்கினார். அதில் 26 வருடங்களுக்கு முன்பு குழந்தைகளை கடத்தியது தெரியவந்துள்ளது. ஆண் வாரிசு இல்லாத காரணத்தினால் 3 பிஞ்சு குழந்தைகளை மரியம் திருடியதாக தன் தவறை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர்களுக்கு டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டு இளைஞர்களின் உண்மையான பெற்றோரிடம் அந்நாட்டு அரசு ஒப்படைத்தது. மரியம் மீது போலி சான்றிதழ் தயார் செய்தல், கடத்தல், குடியுரிமையும் கல்வியும் மறுத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது. அதோடு அவருக்கு உதவி செய்த 4 பேர் மீதும் வழக்குகள் போடப்பட்டது.
இந்நிலையில் தற்போது இவ்வழக்கு தொடர்பாக இருவருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. செவிலியர் வேடமிட்டு குழந்தைகளை திருடிய மரியத்திற்கு மரண தண்டனையும், அவருக்கு உதவிய மூன்றாவது குற்றவாளிக்கு 25 வருடங்கள் சிறை தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மீதமுள்ள இருவருக்கு சில தினங்களில் தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது. அதோடு வழக்கில் தொடர்புடைய ஐந்தாவது நபர் வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்து விட்டதால் அவரை சவுதி அரேபியாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.