தாம்பரம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி-பெத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக தாம்பரம் ரயில்வே நிலைய காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தாம்பரம் ரயில்வே நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவரது உடலை உடற்கூறு பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அந்த நபர் சேலையூர் தனியார் கேபிள் டிவி நிறுவனத்தில் வேலை பார்த்து வரதராஜபுரத்தில் வசித்து வந்த நாராயணமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய போது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் நாராயணமூர்த்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல்துறையினர் நாராயணமூர்த்தியின் நண்பர்கள் 2 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.