காய்கறி வியாபாரியை கொலை செய்து கிணற்றில் வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் தண்டபாணி என்பவர் வசித்து வந்தார். இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தண்டபாணி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கீரனூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் சந்தேகத்திற்கிடமாக சாக்கில் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கிணற்றில் மிதந்த சாக்கில் இருந்த சடலத்தை மீட்டனர். அதன் பின் மேற்கொண்ட விசாரணையில் காய்கறி வியாபாரி தண்டபாணி என்பவர்தான் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.