திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொன்டு, நிகழ்ச்சியில் பேசும் போது, திராவிட தத்துவத்தினுடைய அடையாளமாக திகழ்வது மட்டுமல்ல, திராவிடத்திற்கு எதிராக இருக்கின்ற ஆரியத்திற்கும் – இந்தியத்திற்கும், சமஸ்கிருதத்திற்கும், அந்த பண்பாட்டிற்கும் இன்றைக்கு சவால் விட்டு இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை 2024-இல் நிலை நிறுத்த போகின்ற ஒப்பற்ற தலைவராக இருக்கின்ற நம்முடைய அன்பு தலைவர், வணக்கத்திற்குரிய ”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்கின்ற தலைவரின் ஆணையை ஏற்று, தமிழகம் முழுக்க இந்த கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இன்றைக்கு இந்திய திணிக்கிறார்களே எதற்காக ? இந்தி மூலமாக இந்துத்துவாவை கொண்டு வர வேண்டும் என்பதற்காக… இந்துத்துவா மூலமாக தமிழர்களுடைய அடையாளத்தை, பண்பாட்டை, நசுக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்பதற்காக…. நான் என்னுடைய உரையின் பிற்பகுதியில் இருந்து வருகிறேன். ஆனால் வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தை அண்ணன் நேரு அவர்கள் வழங்கி இருக்கிறார் என்று சொன்னால், அதற்கு என்ன காரணம் ?
26.12.1937-இல் பெரியார் மாநாடு நடத்தினார்.. ”தமிழர் மாநாடு” என்று நடத்தினார். பெயரை மாற்றி நடத்தினார். கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார், யாரை தலைவராக போட்டார் தெரியுமா ? காசிபிள்ளை என்கின்ற ஒரு உயர்ந்த ஜாதி தமிழரை… சைவ பிள்ளைமார் என்று சொல்லப்பட்ட மிகப்பெரிய தமிழ் அறிஞரை.. படித்த இளைஞர்கள் வந்து இருக்கிறீர்கள். இணையத்தில் தேடி பாருங்கள். உங்கள் கைபேசியில் அடித்து பாருங்கள்
காசிப்பிள்ளை யார் ? என்று… முதன் முதலில், முதன் முதலாக பிராமர் அல்லாத சமுதாயத்தில் சட்டத்தில் மேற்படிப்பு படித்த ஒரே ஒரு தமிழர் காசிபிள்ளை. அவருக்கு பெயர் ”பூசை பிள்ளை” ஏன் பூசை பிள்ளை என்றால், சட்ட கல்லூரியில் மாணவராக இருக்கும்போதே… சிவலிங்கத்தை வைத்து தினந்தோறும் ”தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பூஜித்து விட்டு தான் கல்லூரிக்கு போவார்.
அவர் கடவுள் மறுப்பாளர் அல்ல, சைவத்திலே திளைத்தவர், சைவமும், தமிழும் என் இரு கண்கள் என்று பல கட்டுரைகளை எழுதியவர். தமிழிலே மிகப்பெரிய சொல்லால் ஆட்சி செய்தவர். சட்டத்திலே முதன்முதலாக மேல் படிப்பு படித்த, பிராமர் அல்லாத தமிழர். பெரியார் நடத்திய ”தமிழர் மாநாடு” வரவேற்புரை யார் தெரியுமா ? நாவலர் சோமசுந்தர பாரதியார். யார் அந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் என்றால் ?
ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் கொளுத்த வேண்டும் என்று திராவிட கழகத்தில் பெரியார் அறிவித்தார். அண்ணா, அப்போது பெரியாரிடம் இருக்கிறார், திமுக பிறக்கவில்லை. ராமாயணத்தையும் – மகாபாரத்தையும் கொளுத்தலாமா ? என்று பட்டிமன்றம் நடக்கிறது. வழக்காடு மற்றும் நடக்கிறது. அந்த வழக்காடு மன்றத்தில் கொளுத்த வேண்டும் என்று அண்ணா பேசுகிறார், கொளுத்த கூடாது என்று ரா. பி சேதுபிள்ளையும், நாவலர் சோமசுந்தர பாரதியும் பேசுகிறார். அந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் வரவேற்புரை.
தீர்மானத்தை விளக்கி பேசுவது யார் தெரியுமா ? உமா மகேஸ்வரன் பிள்ளை. அவரும் ஒரு பிள்ளைமார். அவர் சைவத்திலே உரியவர். இன்னும் சொல்லப்போனால், ஒரு அளவிற்கு ஜாதி பாகுபாடு இருப்பது தவறு இல்லை என்று சொன்னவர், ஆனால் தமிழர். கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் பெரியார். ஜாதி இல்லை என்று சொன்னவர் பெரியார். எந்த ஜாதியும் ஏற்றுக் கொள்ளாதவர் பெரியார். ஆனால் அந்த பெரியார் தமிழைக் காப்பாற்ற வேண்டும், இந்தியை விரட்ட வேண்டும் என்பதற்காக… தமிழ்நாட்டில் முதன் முதலாக ஒரு மாநாட்டை கூட்டினார். இன்றைக்கு சொல்கிறீர்களே… அந்த மதம், இந்த மதம், இந்து மதம் என்று…
இப்ப நான் சொன்னதெல்லாம் யாரு? நீங்க சொல்கின்ற மதம் தானே.. அந்த மதத்தில் இருந்த, சைவத்திலிருந்த.. இத்தனை தலைவர்களை அழைத்து தான், தமிழை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பெரியார் திருச்சியில் 85 ஆண்டுகளுக்கு முன்னால் முதல் மாநாட்டை நடத்தினர். அந்த திருச்சியில் பேசுகின்ற வாய்ப்பை அண்ணன் நேரு எனக்கு வழங்கி இருக்கிறார் என்றால் இங்கிருந்தே நான் அவரை வணங்க கடமைப்பட்டிருக்கிறேன் தெரிவித்தார்.