கவின் நடிக்கும் ‘டாடா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பாக எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் புது படத்தில் நடிகர் கவின் மற்றும் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் இணைந்து நடிக்கிறார். இந்த திரைபடத்தை அறிமுகம் இயக்குனரான கணேஷ் கே.பாபு இயக்குகிறார். நவீனகால பின்னணியில் கேளிக்கை மற்றும் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய உணர்ச்சிகரமான காதல் கதையாக உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பான ‘டாடா’ இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது. இதற்கிடையில் படத்திற்கான டைட்டில் குறித்து இயக்குனர் கணேஷ் பாபு கூறியதாவது, அனைவருக்கும் மிகவும் அவசியமானது என்பதால் இப்படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளோம். அனைவரும் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது இந்த பெயரினை கேட்டிருப்பார்கள் அல்லது உச்சரித்திருப்பார்கள். இது மட்டுமின்றி இப்படத்தில் இந்த தலைப்புக்கு நிறைய முக்கியத்துவம் உள்ளது மற்றும் ‘டாடா’ படத்தின் திரைக்கதைக்கு மிகவும் பொருத்தமாகவும் இந்த தலைப்பு இருக்கும்.
இந்த படத்தின் மொத்த குழுவினரும் படத்தை மிகச் சிறப்பாக வடிக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடங்க உள்ள நிலையில் முழு படப்பிடிப்பும் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் கே பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் 3௦ ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கின்றனர். மேலும் ஹரிஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவில் எழில் அரசு K (ஒளிப்பதிவு), ஜென் மார்ட்டின் (இசை), கதிரேஷ் அழகேசன் (எடிட்டிங்), சண்முக ராஜ் (கலை) மற்றும் சுகிர்தா பாலன் (ஆடை வடிவமைப்பு), APV மாறன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), அருணாச்சலம் சிவலிங்கம் (ஒலி வடிவமைப்பு) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.