ஜிம்பாப்வேயில் உள்ள தங்க சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் அடுத்தடுத்து வெடித்ததன் காரணமாக 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வேயின் மத்திய பகுதியில் உள்ள மசோலாந்தின் மசோவ் என்ற இடத்தில் தங்கச் சுரங்கமானது இயங்கி வருகிறது. இதில் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், ஏராளமான உள்ளூர் வாசிகளும் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று மாலை வழக்கம் போல் சுரங்கத்தில் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்பொழுது சற்றும் எதிர்பாராத விதத்தில் சுரங்கத்திலிருந்த சிலிண்டர்களானது அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெடித்து சிதறியது. இதனால் தங்கசுரங்கம் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த விபத்தில் சீனர்கள் 5 பேர் மற்றும் ஜிம்பாப்வேவை சேர்ந்த இருவர் உள்பட மொத்தம் 7 பேர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஒருவர் படுகாயமடைந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.