கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட உள்நாட்டு விமான பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று தேவையில்லை என மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை கடந்த 52 நாட்களுக்குப் பிறகு இன்றுதான் 15 லட்சத்திற்கு கீழ் சென்றுள்ளது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல விமான நிலையங்களில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை என மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலங்களுக்கு செல்ல விமான நிலையங்களில் கொரோனா நெகட்டிவ் சான்று தேவை என்ற விதியை தளர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகின்றது. இந்த விவகாரத்தில் கருத்து கேட்கப்பட்டு விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் கூறப்படுகிறது.