ஸ்பெயின் நாட்டில் உள்ள கேனரி தீவில் எரிமலை வெடிப்புகள் தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அந்நாட்டு அரசு ஊரடங்கை தளர்த்துவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் கேனரி தீவின் தெற்கே அமைந்துள்ள டெனிகுவியா எரிமலையை சுற்றி இருக்கின்ற கும்ப்ரே விஜா தேசிய பூங்காவில் அவ்வபோது நிலநடுக்கங்கள் ஏற்படும். இந்த நிலநடுக்கம் காரணமாக டெனிகுவியா எரிமலை வெடித்து சிதறும் அபாயம் இருப்பதால் அங்குள்ள மக்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கும்ப்ரே விஜா எரிமலையில் ஏற்பட்டுள்ள தீப்பிழம்புகளுக்கு மத்தியில் தற்போது லார்வா குழம்புகளும் எரிமலையிலிருந்து கசிய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்துள்ளது. மேலும் செப்டம்பர் 19-ஆம் தேதி திடீரென எரிமலை வெடித்ததையடுத்து லார்வாக்களும், தீப்பிழம்புகளும் 600 ஹெக்டேர் பரப்பளவை சூழ்ந்தன.
அதோடு மட்டுமில்லாமல் எரிமலை வெடிப்பால் புகை மண்டலங்களும் சூழ்ந்ததால் மக்கள் தரமான காற்றை சுவாசிக்க முடியாத சூழல் உருவானது. இந்த நிலையில் அந்த மாகாண அரசு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்தது. இதையடுத்து விஞ்ஞானிகள் சிலர் லாபால்மா பகுதியை சுற்றி மக்கள் சுவாசிப்பதற்கு தரமான காற்று இருப்பதை உறுதி செய்துள்ளனர். அதன் பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு முன்பு கடந்த மாதத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் கும்ப்ரே விஜா எரிமலையை சுற்றி கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.