ஊரடங்கை மீறி சிறுவன் ஒருவன் காய்கறி விற்ற காரணத்தினால் காவல்துறையினர் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அடுத்த ஒரு கிராமத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் குடும்ப வறுமை காரணமாக காய்கறிகளை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். அந்த வழியாக வந்த காவல்துறையினர் ஊரடங்கை மீறி காய்கறிகளை விற்றதற்காக அந்த சிறுவனை அடித்துள்ளனர். மேலும் அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அந்த சிறுவன் பலத்த காயம் அடைந்துள்ளார். பின்னர் அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த அதிகாரிகள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கான்ஸ்டபிள் மற்றும் காவல்துறையினரை உடனடியாக இடைநீக்கம் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் எஸ்பி சசி சேகர் கூறும்போது: “காய்கறி விற்பனையாளரான 17 வயது சிறுவன் சடலத்தை இரண்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ததில் அவரது உடலில் 14 இடங்களில் பலத்தகாயம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் குற்றம்சாட்டப்பட்ட ஊர்க்காவல் படைகாவலர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் அவரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சிறுவன் குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.