கனடா நாட்டிற்கு சுற்று பயணமாக சென்ற போப் ஆண்டவருக்கு அங்கிருக்கும் பழங்குடியின மக்கள் கிரீடம் அணிவித்து மகிழ்ந்தனர்.
உலகில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு தலைவராக இருக்கும் போப்பாண்டவர் பிரான்சிஸ் கனடாவிற்கு சுற்றுப் பயணமாக சென்றிருக்கிறார். அவர், அல்பெர்டா மாகாணத்தின் மாஸ்க்வாசிஸ் நகருக்கு சென்றார். அந்த நகரில் 19 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க திருச்சபை நடத்திய பூர்வகுடியின குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
எனவே, அந்த பள்ளிகளுக்கு சென்று பூர்வகுடியின மக்களிடம் மனம் வருந்தி மன்னிப்பு கோரினார். அதனையடுத்து, எதிர்பாராத விதமாக பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரியமான கிரீடத்தை அவருக்கு அணிவித்தார்கள்.
பழங்காலத்தில் கத்தோலிக்க திருச்சபை நடத்திய பள்ளிகளில் நடந்த கொடுமைகளிலிருந்து தப்பிய சீப் வில்டன் லிட்டில்சைல்ட் என்ற நபர் போப்பாண்டவருக்கு கிரீடத்தை அணிவித்தார். போப் ஆண்டவர், அவரின் கைகளை பற்றி முத்தமிட்டு நன்றி கூறினார். அங்கிருந்த மக்கள் ஆரவாரமாக கைதட்டி மகிழ்ந்தனர்.