திருவாரூர் மாவட்டத்தில் தண்ணீர் இல்லாததால் குருவை சாகுபடி பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால் தண்ணீர் திறந்துவிடும் படி விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடுத்துள்ள சிங்கமங்கலம் கிராமத்தில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு மூலம் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த மாதத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால் வயல்வெளிகள் மிகவும் வறண்டு கிடைப்பதால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர். இதனையடுத்து தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வறண்டு இருப்பதால் காலை எடுக்க முடியாமலும், உரம் போட முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து தண்ணீர் இல்லாமல் இருந்தால் சில நாட்களிலில் பயிர்கள் அனைத்தும் கருகும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் கோரையாற்றில் இருந்து விவசாய பாசனத்திற்கு தேவையான தண்ணீரை உடனடியாக நெய்குண்ணம் வாய்க்காலில் திறந்துவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாயிகள் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீரை திறந்து விட்டு வாடும் பயிர்களை பாதுகாக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பியுள்ளனர்.