அமெரிக்காவில் விமானத்தில் ஒரு பெண் பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் விமான கழிவறையில் 3 மணி நேரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரிலிருந்து ஐஸ்லாந்திற்கு Icelandair என்ற விமானம் புறப்பட்டிருக்கிறது. அதில் மிச்சிகன் நகரில் வசிக்கும் மரிசா ஃபோட்டியோ என்ற பெண், தன் குடும்பத்தாருடன் பயணித்திருக்கிறார். விமானம் புறப்பட்டு சென்ற, ஒன்றரை மணி நேரத்தில் அவருக்கு கடும் இருமல் ஏற்பட்டது.
எனவே அவர் சந்தேகமடைந்து, தான் வைத்திருந்த ரேபிட் கொரோனா பரிசோதனை கிட்டை, விமானத்தின் கழிவறைக்கு எடுத்து சென்று பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது. அவர் அதிர்ந்து போனார். எனினும், பிற பயணிகளுக்கு தொற்று ஏற்பட்டுவிட கூடாது என்ற நல்லெண்ணத்தில், உடனடியாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள நினைத்து விமானப் பணிப்பெண்ணிடம் கூறியிருக்கிறார்.
தனி சீட் இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார். தனி சீட் இல்லாததால், கழிவறையில் என்னை தனிமைப்படுத்திக்கொள்கிறேன் என்று கூறி மூன்று மணி நேரங்களாக கழிவறையிலிருந்திருக்கிறார். எனினும், விமான பயணத்திற்கு முன் அவர் இரண்டு முறை பிசிஆர் பரிசோதனைகளும், ஐந்து முறை ரேபிட் பரிசோதனைகளும் மேற்கொண்டார்.
அப்போது அவருக்கு தொற்று இல்லை என்று தான் வந்திருக்கிறது. ஆனால், விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென்று கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் ஐஸ்லாந்திற்கு சென்றடைந்தவுடன், அனைத்து பயணிகளும் இறங்கினர். அதன்பின்பு தான், மரிசா ஃபோட்டியோவின் குடும்பத்தினர் தனியாக கடைசியில் இறங்கினார்கள்.
அங்கு, அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மரிசாவின் தந்தை மற்றும் சகோதரருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது. எனவே அவர்கள் இருவரும் சுவிட்சர்லாந்திற்கு புறப்பட்டனர். மரிசா ஃபோட்டியோ, ஒரு ஓட்டலில் தன்னை பத்து நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்.