Categories
தேசிய செய்திகள்

1,400 கி.மீ தூரம் தனி ஆளாக சென்று ஆந்திர மாநிலத்தில் சிக்கிய மகனை மீட்ட தாய்: நெகிழவைத்த சம்பவம்!

தெலுங்கானாவை சேர்த்த 50 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர் இரு சக்கர வாகனத்தில் 1,400 கி.மீ தூரம் பயணம் செய்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிக்கி இருந்த தனது மகனை மீட்டு வந்துள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், இங்கு தாயின் பாசம் கொரோனாவையே பின்னுக்கு தள்ளியது. தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ரசியா பேகம். 50 வயதான இவர், ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது இளையமகன் முகமது நிசாமுதீன், ஊரடங்கு அமல் படுத்துவதற்கு முன்பு தனது நண்பரை பார்ப்பதற்காக ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு சென்றார்.

பின்னர் ஊரடங்கால் அவர் நண்பர் வீட்டிலேயே தங்கியிருந்தார். இந்த நிலையில், தனது மகனை அழைத்து வர முடிவு செய்த ரசியா பேகம், தனது இரு சக்கர வாகனத்திலேயே தனி ஆளாக பயணம் செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்ற போதன் நகர காவல் இணை ஆணையர் அனுமதி கடிதம் வழங்கினார். இதனை பெற்று கொண்டு கடந்த திங்கட்கிழமை காலை தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு 700 கி.மீ தொலைவில் உள்ள நெல்லூருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றார்.

அங்கு தனது மகனை பார்த்து மகிழ்ச்சியடைந்த ரசியா பேகம் அன்று இரவு மகனுடன் இரு சக்கர வாகனத்தில் பயணித்து புதன் கிழமை மாலை வீட்டிற்கு வந்துள்ளார். தனி ஆளாக 1,400 கி.மீ பயணம் செய்து மகனை அவர் மீட்டுள்ளார்.

Categories

Tech |