கோயம்புத்தூரில் கலெக்டர் அலுவலகத்தில் தங்களது ஊருக்கு செல்ல வேண்டி பொதுமக்கள் கூட்டம் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு ஆனது ஏப்ரல் 14ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இறந்தவர்களின் ஈமச்சடங்கு திருமணம் உள்ளிட்ட அவசர காரியங்களுக்காக செல்ல விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பித்த பின் பாஸ் பெற்று செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட சொந்த ஊரைவிட்டு ஆங்காங்கே வசிக்கும் மக்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல வேண்டியும், பாஸ் வழங்குமாறும் தமிழக முழுவதும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு தங்களது ஊருக்கு அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தனர். முதலில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் நின்ற மக்களை கலெக்டர் நேரில் வந்து பார்வையிட்டு அனுமதி வழங்கினார். அதன் பின்பு அவர் உள்ளே சென்றுவிட கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. மக்கள் பதற்றமடைந்து கதவின் அருகே கூட்டம் கூட்டமாக திரள ஆரம்பித்தனர்.
பின் காவல்துறை அதிகாரிகள் சமூக இடைவெளியை கைவிடுமாறு வலியுறுத்தி வந்த போதிலும், மக்கள் கடைபிடிக்காததால் அனைவரையும் ஆன்லைனில் விண்ணப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தி விட்டு சென்றுவிட்டார். மேலும் கலெக்டர் அலுவலகத்தின் கதவில் ஆன்லைனின் முகவரி ஒட்டப்பட்டிருந்தது. அதனை பொதுமக்கள் புகைப்படம் எடுத்துவிட்டு தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.