கோவையில் பிரபல மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசு மருத்துவமனையில் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் மக்கள் தங்களது உயிரின் மேல் உள்ள ஆசையால் தனியார் மருத்துவமனையை நாடிச் செல்கின்றனர். ஆனால், அவர்களது இந்த பயத்தை லாபமாக மாற்றும் நோக்கில் பல தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்கு அதிக பணம் கேட்டு கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைக்கின்றனர்.
ஆனால் தமிழக அரசோ அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. அதன்படி, கோயம்புத்தூரில் அதிக கட்டணம் வசூலித்த ஸ்ரீலட்சுமி மருத்துவமனையில் கொரோனாவுக்கான சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ரூபாய் 40,000 வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிக கட்டணம் வசூல் செய்யும் மருத்துவமனை தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.