தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தேநீர் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மறு உத்தரவு வரும் வரை தேநீர் கடைகளை மூட தூத்துக்குடி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டிருந்தன.
மாவட்டங்கள் அனைத்தும் மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. சில மண்டலங்களில் பேருந்து சேவைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. தேநீர் கடைகள், உணவகங்கள், சலூன் கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள் ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 74,000த்தை தாண்டியுள்ளது.
சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்பவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என கூறப்பட்டது. அதன் காரணமாக கடந்த 19ம் தேதி முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதேபோல, மதுரை, தேனி மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அநேக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தளர்வுகளை கடுமையாக்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,
தேநீர் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது தூத்துக்குடியில் கொரோனவால் 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 513 பேர் குணமடைந்து, 271 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். நேற்று மட்டும் தூத்துக்குடியில் 37 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.