கூலித் தொழிலாளியை அடித்துக் கொன்ற குற்றத்திற்காக வடமாநில கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் சிவசாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் முன்பு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் திடீரென சிவசாமியின் வீட்டிற்குள் நுழைந்து திருட முயற்சி செய்துள்ளார். இதனால் சிவசாமி அவரை தடுத்து நிறுத்த முயற்சிக்கும்போது, கோபமடைந்த அந்த மர்மநபர் பக்கத்தில் இருந்த தென்னை மட்டையை எடுத்து சிவசாமியை சரமாரியாக அடித்து உள்ளார். இதில் சிவசாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த மர்ம நபரை பிடித்து அன்னூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மர்ம நபர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பினோஜ் யாக்கா என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்ததும், ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு உள்ளே புகுந்து திருடுவதை வழக்கமாக வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பிறகு கோவை மத்திய சிறையில் காவல்துறையினர் அவரை அடைத்து விட்டனர். இந்த வழக்கானது கோயம்புத்தூர் முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன் சிவசாமியை கொலை செய்த குற்றத்திற்காக பினோஜ் யாக்காவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.