கோரோனாவினால் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியில் அர்ஜுனன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஞ்சலை என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கடந்த சில நாட்களாக அஞ்சலையின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் ஒருவர் இவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு சென்ற போது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் அந்த நபர் ஜன்னல் வழியே எட்டி பார்த்த போது கணவன் மனைவி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மதுரவாயல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அஞ்சலைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவருக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தொற்றை காரணமாக காட்டி தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.