Categories
மாநில செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு…. இருமலுடன் தொடங்கும் காலர் டியூனை தடை செய்யக்கோரி வழக்கு!

சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் ஜியோ (Jio) உள்ளிட்ட அனைத்து தொலை தொடர்பு சேவைகளிலும் போன் செய்தால், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளைச் சொல்லும்படியாக அமைக்கப்பட்டுள்ளது.

இருமல் சத்தத்துடன் ஆரம்பமாகும் அந்த விழிப்புணர்வு ஆடியோவில், கொரோனா வைரஸை தடுக்க சோப் மூலம் கைகளை அடிக்கடி கழுவவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விழிப்புணர்வு காலர் டியூனை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த வழக்கறிஞர் சிவ. ராஜசேகரன் என்பவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், இருமலுடன் தொடங்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனை தடை செய்யவேண்டும். இதுபோன்ற விழிப்புணர்வு விளம்பரத்தால் ஆரோக்கியமான நபரும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது போன்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். விளம்பரம் எரிச்சல் ஊட்டும் வகையிலும் இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறுஞ்செய்தி, வாட்ஸ் அப், ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், திரையரங்குகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல வழிகள் இருக்கும்போது, இருமலுடன் தொடங்கும் காலர் டியூனை பயன்படுத்துவது மக்களின் அமைதியான வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையில் இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |