சுவிட்சர்லாந்து அரசு கொரோனா தொடர்பான விதிமுறைகளை ஆகஸ்ட் மாதத்தில் முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
சுவிட்சர்லாந்தில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சரான Alain Berset கூறுகையில், இது நமது கடுமையான முயற்சியின் பலன். ஒவ்வொரு கட்டுப்பாடும் தளர்த்தப்படுவது ஆபத்துக்குரியதுதான்.
அதற்காக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது. எனினும் பெடரல் கவுன்சிலின் இலக்கு முடிந்தவரைக்கும் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான ஒரேவழி தடுப்பூசி செலுத்துவதுதான். அந்த விஷயத்தில் பெடரல் கவுன்சில் உறுதியாக இருக்கிறது.
முடிந்தளவு விரைவாக தடுப்பு ஊசி செலுத்தி கொண்டால் கட்டுப்பாடுகளும் விரைவில் முடிவுக்கு வரும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இது நடைபெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. திடீரென்று உருமாற்றமடைந்த கொரோனாவால் தடுப்பூசிகளுக்கு பிரச்சினை ஏதும் வந்ததாக தெரியவில்லை. எனினும் வருங்காலத்தில் வழக்கமாக தொடர்ந்து இந்த தடுப்பூசிகளை செலுத்த வேண்டிய தேவை ஏற்படுமா என்று தற்போது உறுதியாக கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.