வெளிநாட்டினர் அலட்சியமாக இருந்ததால் கொரோனாவால் பெரிய இழப்பை சந்தித்துள்ளனர் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுக்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்ற நிலையில், மே 3க்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க ஏற்படுத்தப்பட்ட சிறப்பு குழுக்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, காய்கறி சந்தைகளை கையாள்வதில் தான் பிரச்சினை, இதனை மக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என கூறியுள்ளார்.
ஆரம்ப கால கட்டத்திலேயே மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால், எளிதாக கொரோனா பரவலை தடுக்கலாம் என தெரிவித்தார். வெளிநாட்டினர் அலட்சியமாக இருந்ததால் பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், கொரோனா குறித்து காவல் துறையும், உள்ளாட்சி துறையும் ஒலிபெருக்கி மூலம் வீதிவீதியாக தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா தடுப்புப் பணியிலுள்ள அதிகாரிகளின் செயல்பாடு பாராட்டத்தக்கது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.