சிங்கப்பூரில் ஒரு மாத ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு பிரதமர் லீ ஹ்சியன் லூங் அறிவித்துள்ளார். அடுத்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) தொடங்கி 1 மாத பணிநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதாரத் துறைகளைத் தவிர பெரும்பாலான பணியிடங்கள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிங்கப்பூரிலும் ஒரு மாத கால ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 7ம் தேதியிலிருந்து இந்த உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், சில தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் செய்யும் பொருளாதார துறைகள் இயங்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை 1,049 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் புதிதாக 74 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் 5 இந்தியர்களும் அடங்குவர்.