இந்தியாவில் 120க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால் கொரோனாவை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது.
கல்வி நிறுவனங்கள் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்களை மார்ச் 31 வரை மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அண்டை மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ரயில்வே, விமான நிலைய அதிகாரிகளை அழைத்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் 1,80,062 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 25 லட்சம் முகக்கவசங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒரு ஆய்வகத்தில் 100 மாதிரிகளை பரிசோதனை செய்யும் வகையில் 5 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தோற்று அறிகுறி உள்ள 2,221 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அண்டை மாநிலங்களவை இருந்து வருபவர்களை சோதனை சாவடியில் காவல்துறை உதவியுடன் சோதனை செய்து வருகிறோம். கொரோனா தோற்று அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பது போல, வைரஸ் இல்லாதவர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது என்று தகவல் அளித்துள்ளார்.