கொரோனாவால் உயிரிழப்போர் சதவிகிதம் உலகத்திலேயே தமிழகத்தில் குறைவு என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
கொரோனாவால் உயிரிழப்போரின் சதவிகிதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழகத்தில் தான் மிகக்குறைவு என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் தமிழகத்தில் தான் அதிகம், மருத்துவ வல்லுநர்கள், பொது சுகாதார வல்லுநர்கள், நடுநிலையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் தமிழகத்தை பாராட்டி வருகிறார்கள் என அவர் தகவல் அளித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 86% பேர் அறிகுறிகள் இல்லாதவர்கள்.
நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் அதிக சோதனை மையங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 13 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜூன் 4ம் தேதி வரை தமிழகத்தில் சுமார் 5.50 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என விளக்கம் அளித்துள்ளார். மேலும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது,
வெளியில் செல்லும் அவசியம் ஏற்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும்; தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காக்க அனைவரும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஊரடங்கிலும் விவசாயம், சரக்கு போக்குவரத்திற்கு அனுமதி அளித்ததால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.