கொரோனாவிலிருந்து குணமடைவோரில் எட்டில் ஒருவர் 140 நாட்களுக்குள் உயிரிழக்கிறார் என்று அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பும் கொரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் 5 மாதங்களுக்குள் மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் எட்டில் ஒருவர் மீண்டும் கொரோனா பிரச்சனைகளால் உயிரிழப்பதாக ஆய்வு ஒன்றின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leicester பல்கலைக்கழகமும் தேசிய புள்ளி விவரங்கள் அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் கொரோனாவில் முதல் அலை தாக்கத்தின் போது மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய 47,780 பேரில் 29.4 சதவிகிதத்தினர் 140 நாட்களுக்குள் மீண்டும் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களில் 12.3 சதவிகிதத்தினர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றால் ஏற்பட்ட நீண்டகால விளைவுகளால், கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களில் பலருக்கும் இதய பிரச்சனைகள், நீரிழிவு, நீண்டகால கல்லீரல் பிரச்சனைகள் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. இந்த முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தாலும் இது ஆரம்ப கட்ட முடிவுகளின் அடிப்படையிலானது.மேலும் இந்த முடிவுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.