கொரோனா அதிகமாக பாதித்த 15 மாவட்டங்களை உத்தரபிரதேச அரசாங்கம் சீல் வைத்துள்ளது. கவுதம் புத் நகர் (நொய்டா), தலைநகர் லக்னோ, காசியாபாத், மீரட், ஆக்ரா, கான்பூர், வாரணாசி, ஷாம்லி, பரேலி, புலந்த்ஷஹர், ஃபிரோசாபாத், மகாராஜ்கஞ்ச், சீதாபூர், சஹரன்பூர் மற்றும் பஸ்தி ஆகிய 15 மாவட்டங்களை அம்மாநில அரசாங்கம் சீல் வைத்து மக்கள் செல்ல தடை விதித்துள்ளது.
மேலும், அத்தியாவசிய பொருட்கள் ஹோம் டெலிவரி மூலம் கொண்டு சேர்க்கப்படும் என்றும் மற்றும் மருத்துவ குழுக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுவதாக தலைமை பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே. திவாரி தெரிவித்துள்ளார். இந்த 15 மாவட்டங்களிலும் 6க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே அந்த அப்பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விதியை மீறி சீல் வைக்கப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் வெளியே வந்தாலோ, அல்லது மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகளை தடுப்பவர்கள் மீது அரசாங்கம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திவாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக பரவலை தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடி வரும் நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இதையடுத்து, உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் நொய்டா பகுதியில் 58 பேரும், ஆக்ராவில் 44 பேரும், மீரட்டில் 25 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.