இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 339ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,036 பேர் குணமடைந்துள்ளனர்.
மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ராணுவ வீரர்களை போல நீங்கள் நாட்டுக்காக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள். ஊரடங்கால் நிறைய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. நிறைய பண்டிகைகளை கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். உங்களுடைய ஒத்துழைப்பு நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவியிருக்கிறது என நெகிழ்ந்த மோடி, உங்கள் தியாகங்களை நான் பெரிதும் மதிக்கிறேன்.
உங்களுடைய பிரச்சினைகளை நான் புரிந்து கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார். உரிய நேரத்தில், உரிய முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ள அவர், இந்தியாவே இணைந்து இந்த வைரஸுக்கு எதிராக போராடி வருகிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் சவால் நிறைந்ததே வாழ்க்கை என்பதற்கு அம்பேத்கர் வாழ்க்கையே உதாரணம், அரசியல் சட்டத்தின் வலிமையை நிலைநாட்டுவது, அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் மரியாதை என உரையாற்றியுள்ளார்.