புதுச்சேரியில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார். இதையடுத்து புதுச்சேரியில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. அதில் இதுவரை 84 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பொதுமக்கள் அலட்சியமாகி விட்டதால் புதுச்சேரியில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் தமிழகத்தில் சென்னையில் பாதிப்பு அதிகமாகி வருவதால் புதுச்சேரி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மல்லாடி கிருஷ்ணாராவ் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் குமளம் கிராமத்தை சேர்ந்த முதியவர் செல்வராஜ் (80) என்பவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உட்பட பல்வேறு நோய் காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இவர் கடந்த 4-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.அவருக்கு கொரோனா இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று வரை மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 133 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது கொரோனாவுக்கு 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.