சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 27 வயது பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கடந்த 3ம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய இந்த பெண் மருத்துவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பெண் மருத்துவரின் தந்தைக்கு கடந்த 4ம் தேதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, இருவரும் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் அவரது வீடு இருக்கும் பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் ஒரு சிறப்பு குழுவானது வண்ணாரப்பேட்டை மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என ஆய்வு நடத்த முடிவெடுத்துள்ளனர். மேலும், இந்த மருத்துவமனைக்கு சீல் வைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனை முழுவதும் கிறுமி நாசினி தெளிக்கும் பணிகளில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, இந்த மருத்துவமணையில் புறநோயாளியாக வந்து சிகிச்சை பெற்றவர்களின் விவரங்கள் குறித்து சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவமனைக்கு வந்து சென்றவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து சோதனை செய்துகொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. சென்னையில் இதுவரை 172 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.