கொரோனா வேகமெடுத்து பரவி வருவதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சிவகங்கையில் வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் வேகமெடுத்து வரும் கொரோனாவால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார நிலையங்கள் ஆகியவ இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது கொரோனா மீண்டும் மிரட்டி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 19-ஆம் தேதி மட்டும் 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி அனைத்து பொதுமக்களும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனாவை தடுப்பதற்காக தடுப்பூசிகள் போடப்பட்டது.
இதையடுத்து 28 நாட்கள் பின்னர் இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டது. தற்போது தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி இதுவரை 309 பேருக்கு போடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள், உடல்நலம் சரியில்லாதவர்கள், 17 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் தடுப்பூசி போட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே கொரோனாவை முழுமையாக பரவாமல் தடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.