தென்காசி நெல்லை மாவட்டங்களில் 5 இடங்களிலும் தூத்துக்குடியில் 10 இடங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை விறுவிறுப்பாக நடந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் முனைஞ்சிப்பட்டி, கூடங்குளம் அரசு மருத்துவமனை, நெல்லை சிந்துபூந்துறை செல்வி நகர் மாநகராட்சி மருத்துவமனை, கல்லிடைக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனை என சுமார் ஐந்து இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
தென்காசியில் தலைமை மருத்துவமனை மற்றும் தென்காசி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், செங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தென்காசியில் ஒரு தனியார் மருத்துவமனை என 5 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது. தென்காசி தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி ஒத்திகையில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்றார்.
பின்பு அவர் தடுப்பூசி போடும் அறை மற்றும் காத்திருப்போர் அறை ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். தூத்துக்குடியை பொறுத்தவரை தூத்துக்குடி, கோவில்பட்டி என இரண்டு பாகங்களாக பிரித்து இரண்டிலும் 5 இடங்களில் ஒத்திகை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை, புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம், முள்ளக்காடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், தூத்துக்குடி தனியார் மருத்துவமனை, தூத்துக்குடி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைபெற்றது..
கோவில்பட்டியை பொறுத்தவரை ஸ்ரீராம் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், புதூர் ஆரம்ப சுகாதார நிலையம், கீழ ஈரால் ஆரம்ப சுகாதார நிலையம், கோவில்பட்டி அரசு மருத்துவமனை, கோவில்பட்டி தனியார் மருத்துவமனை போன்றவற்றில் கொரோனா ஒத்திகை நடைபெற்றது. இதில் தூத்துக்குடியில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்குமார் கலந்து கொண்டார்.