கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சிகிச்சைக்கு வர மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருக்கும் குமரன் தெருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனவால் பாதிக்கப்பட்ட அவர்கள் அரசின் வழிமுறைகளை மீறி வெளியே சுற்றித் திரிந்ததால் 6 பேரையும் சுகாதாரத்துறையினர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல வந்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து காவல்துறையினர் சுமார் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சிகிச்சைக்கு வர அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். பின்னர் 6 பேரும் தனி ஆம்புலன்ஸ் மூலமாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.