30 நொடியில் கொரோனா பாதிப்பை கண்டறியும் தொழில்நுட்பத்தை டெல்லியில் சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி ஒன்று தடுப்பூசி கண்டுபிடிப்பது. மற்றொன்று பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பது.
ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியாத சூழல் தற்போது இந்தியாவில் இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியாவதற்கு இரண்டு முதல் நான்கு நாட்கள் ஆவதாக தகவல்கள் வெளியாகின்றன.
இந்நிலையில் வெறும் 30 வினாடிகளில் கொரோனா பாதிப்பை உறுதி செய்யும் வகையில், இஸ்ரேல் விஞ்ஞானிகள் உருவாக்கிய 4 புதிய தொழில்நுட்பங்கள் டெல்லியில் சோதிக்கப்பட உள்ளன. மற்ற பரிசோதனை போல் இல்லாமல் ப்ரீத்தலைசர் போன்ற கருவியில் ஊதினாலோ அல்லது பேசினாலோ அதன் மாதிரியை கொண்டு இதற்கான சோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.