டென்மார்க்கில் விலங்குகளிடம் இருந்து பரவிய கொரோனா ஜெர்மனியில் கண்டறியப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டென்மார்க்கில் கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் தேதி மிங்க் எனும் விலங்குகளுடன் தொடர்புடைய கிளஸ்ட்டர் எனும் புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் இந்த வைரஸ்கள் மறைந்து போய் விட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் ஜெர்மனியில் 10 பேருக்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பவேரியாவில் இந்த புதிய வைரஸ் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மறைந்து போய் விட்டதாக சொன்ன வைரஸ் மீண்டும் வந்து ஒரு உயிர் பலியை ஏற்படுத்தி இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய வகை வைரஸ் மனிதர்களை விட மிங்க் என்னும் விலங்குகளுக்கு தான் அபாயமான ஒன்றாகும். அதனால் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு விடலாம் என்ற அச்சத்தில் ஏராளமான மிங்க்களை டென்மார்க் கொன்று குவித்தது குறிப்பிடத்தக்கது.