கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணம் வழங்க தமிழக அரசு 3,250 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருப்பதற்காக இன்று முதல் 144 தடை உத்தரவு அமலாக இருக்கின்றது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்தும் முடக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் பல தரப்பிலிருந்தும் வாழ்வாதாரங்கள் சார்ந்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் தமிழக சட்டசபையில் அறிவித்தார்.
இது தொடர்பாக இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் கொரோனா முன்னெச்சரிக்கை நிவாரண நிதியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு 3,250 கோடி நிவாரண நிதியாக வழங்கவும் ஆணை பிறப்பித்தார். இதில் அனைவருக்கும் விலையில்லா அரிசி, சர்க்கரை வழங்கப்படும். ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். முதலில் 60 கோடியும் , பின்னர் 500 கோடியும் ஒதுக்கீடு செய்த தமிழக அரசு தற்போது மொத்தமாக கொரோனா தடுப்பு நிவாரண நடவடிக்கையை மேற்கொள்ள 3,250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.