சீனாவில் தற்போது உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. சீனாவில் மில்லியன் கணக்கான மக்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெய்ஜிங், ஷாண்டங் மாகாணத்தில் உள்ள கிங்டோவோ உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் தொற்றின் பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரு நாளைக்கு 4,90,000 முதல் 5,30,000 பேர் வரை சீனாவில் பாதிப்படுகிறார்கள்.
குறிப்பாக டோங்குவானில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 2,50,000 முதல் 3 லட்சம் வரையிலான கோவிட் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பெய்ஜிங் மாகாண மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், அவசர சிகிச்சை பிரிவில் தினமும் சராசரியாக 500 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெறுகிறார்கள். இது வழக்கத்தை விட 2.5 மடங்கு அதிகமாகும். இதில் 20 சதவீதம் பேர் தீவிர அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுகிறார்கள். இது மருத்துவமனை அதிகாரிகளுக்கு மிகவும் சவாலாக மாறியுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தீவிர சிகிச்சை பிரிவு வார்டுகள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கான கூடுதல் படுக்கைகள் போன்றவற்றை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் சீனாவில் உள்ள ஊடகங்களில் வரும் தகவலின் படி டிசம்பர் 1 முதல் 20-ம் தேதி வரை 248 மில்லியன் பேர் கோவிட் தொற்றால் பாதிப்படைகிறார்கள். இது சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 17.65 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.