கொரோனா தொற்று பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் வெற்றிகரமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இந்தியாவின் மும்பை மாநகரில் தொற்று அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் அங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி தாராவி. 2.5 சதுர கிலோமீட்டரில் சுமார் 8.5 லட்சம் மக்கள் இங்கு வாழ்கின்றனர். அதோடு வெளியிலிருந்து வந்து செல்பவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் என தெரியவந்துள்ளது.
தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்றினால் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அங்கு ஏராளமாக 10*12 வீடுகளும், கூட்டுக்குடும்பங்கள் அதிகம் இருக்கும் பகுதியாகும். அங்கு ஊரடங்கும், சமூக விலகல், தனிமைப்படுத்துதல் போன்றவற்றில் இருக்கும் சிக்கல்கள் குறித்து அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில் ஏப்ரல் 1 தாராவியில் முதல் கொரோனா தொற்று நுழைந்தது உறுதிப்படுத்தப்பட்ட அன்றே பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார். இரண்டாவது தொற்று உறுதிப்படுத்தும் முன்பே முதல் தொற்று பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்து விடுகின்றார்.
அரசிற்கு இது பெரும் சவாலாக மாறியது. காரணம் தாராவி பகுதி அதிக அளவு மக்கள் நெரிசலை கொண்ட பகுதியாகும். இதனால் சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்துதல் போன்றவற்றை எவ்வாறு சாத்தியப்படுத்துவது என்று அரசு திணறியது. இதனையடுத்து விரைந்து மும்பை பெரும் மாநகராட்சி களத்தில் குதித்தது. முதல்கட்டமாக 47,500 வீடுகளுக்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டு 7 இலட்சம் மக்களை சோதனைக்கு உட்படுத்தினர். அங்கிருந்த ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று தொற்று அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என கேட்டு அறிந்து விட்டு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா என்ற கேள்வியும் எழுந்தது.
அதற்கு அடுத்த கட்டமாக அரசு அங்கிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களான 1.5 லட்சம் பேரை தவிர்த்து மீதி இருக்கும் அனைவருக்கும் முறையான பரிசோதனை செய்யப்பட வேண்டுமென தங்களது யுத்தியை மாற்றினார்கள். அதன் அடிப்படையில் 3.6 லட்சம் பேருக்கு கொரோனா இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்த பரிசோதனையை மும்பை பெரும் மாநகராட்சி அலுவலர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக தாராவி எங்கும் நூற்றுக்கணக்கான காய்ச்சல் கூடங்கள் அமைக்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் காய்ச்சல் என வருபவர்களுக்கு கூட சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
காய்ச்சல் கூடங்கள் அங்கிருக்கும் மருத்துவர்கள் மூலமாகவே நடத்தப்பட்டதால் மக்கள் வரிசையில் காத்திருந்து பரிசோதனை செய்து வீடு திரும்பினர். மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் வேறு ஏதேனும் அறிகுறிகள் இருக்கின்றதா அல்லது பாதிப்புகள் இருக்கின்றதா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ள தொடங்கினர். தாராவி மிகவும் ஆபத்து நிறைந்த பகுதியாக இருந்ததால் அங்கு நோயாளிகளுக்காக படுக்கைகளை அதிகரிக்க வேண்டிய சூழல் இருந்தது. இதனையடுத்து மும்பை பெரும் மாநகராட்சி சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான படுக்கைகள் தயார் செய்யப்பட்டன.
தனிமைப்படுத்தும் கூடாரங்களை தாராவி பகுதி முழுக்க அங்கிருக்கும் பள்ளிகள், மைதானங்கள் என அனைத்து இடங்களிலும் இந்த தனிமைப்படுத்தும் அரங்குகளை அமைத்தார்கள். அதுமட்டுமன்றி பொது கழிப்பறை அதிகம் சுத்தப்படுத்தப்பட்டது. தாராவியில் கிட்டத்தட்ட 80 பேருக்கு ஒரு கழிப்பறை என்ற ஒரு சூழலில் அங்கு இருந்து வந்தது. எனவே அந்தக் கழிப்பறைகளில் சுத்தத்தை உறுதிப்படுத்த அவசியம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தக் கழிப்பறைகள் ஒரு நாளைக்கு 10லிருந்து 12 முறை சுத்திகரிக்க வேண்டும்.
இது அனைத்தையும் தாண்டி தாராவி பகுதியில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2030-ல் ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆனது. இதை எதனால் சாதித்த தாராவி எனக் கூறுகிறோம் என்றால் எதிர்பார்க்கப்பட்ட பாதிப்பின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் தற்போது இருப்பதை விட பன்மடங்கு அதிகமாகும். இவ்வாறு தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பது மும்பை மாநகராட்சியுடைய பெரிய சாதனை என பல ஊடகங்கள் பறைசாற்றுகின்றன
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வந்த நிலையில் மீண்டும் அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் அதுமட்டுமில்லாமல் தாராவியில் பல லட்சம் மக்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கான வேலை, படிப்பு பாதிப்படைந்து இருக்கும் நிலையில் அவர்களுக்கு தேவையான அரிசி உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கின்றது. அங்கிருக்கும் ரேஷன் கடை மூலமாக பொருட்கள் விநியோகம் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும். இதனை மிகப்பெரிய சவாலாகவே மும்பை மாநகராட்சி பார்த்து வருகின்றது. காரணம் மிகவும் விரைவாக அவர்களிடம் இருக்கும் பொருட்கள் தீர்ந்து போவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனால் தொடர்ந்து அங்கு இருக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவுகள் அரிசி உள்ளிட்ட வகைகளை கொடுத்து மருத்துவ வசதி, சுகாதார வசதி என இவை அனைத்தையும் கொடுக்கும் பணி அரசுக்கு இருக்கின்றது. அதனை முழுமையாக செய்து முடிக்கும் கட்டாயமும் அவர்களுக்கு உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தாலும் இந்தப் பணிகளை முடித்தால்தான் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்திய பெருமை தாராவியை வந்துசேரும். தற்போதைய சூழலில் வெற்றிகரமான பாதையிலேயே அவர்கள் பயணித்து வருகின்றார்கள். இது தொடர வேண்டும் என்பதே அனைவரது வேண்டுதலும்.