ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,502-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 36,016 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஒரு கிராம் ரூ. 5,000-ஐ நெருங்கும் என தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் சலானி தகவல் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
தங்கநகை கடைகளும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. கடந்த மாதம் 23ம் தேதி ஊரடங்கு அறிவித்தபோது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,952 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் பல தங்கத்தின் மீது முதலீடு செய்வதால் இவ்வாறு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
ஊரடங்கு முடிந்து கடைகள் திறக்கப்படும் சூழ்நிலையில் தங்கத்தின் விலை மேலும் ரூ.2,000 அதிகரித்துதான் இருக்கும் என தங்க நகை வியாபாரிகள் அறிவித்துள்ளனர். பொருளாதார ரீதியாக பல நாடுகள் சிக்கித்தவித்து வருவதால் தங்கநகை மீது முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.