கன்னியாகுமரியில் மணப்பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த 33 வயது வாலிபர் ஒருவருக்கும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்னதாக சாத்தூர் பகுதியில் இருந்து, மணப்பெண் உட்பட 9 பேர் ஒரு வேனில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின் அவர்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட, திருமணம் நடந்து முடிந்த மறு நாளான இன்று சோதனை முடிவுகள் வெளிவந்தன. அதில் மணப் பெண்ணுக்கும், மணப் பெண்ணுடன் வந்த 25 வயது இளம்பெண்ணுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மணப்பெண் வீட்டிற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மணமகனையும், மண பெண்ணையும் ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று மணப்பெண்ணை சிகிச்சையில் அனுமதித்துவிட்டு, மணமகனை கொரோனா வார்டில் தனிமைப்படுத்தினர்.
பின் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மற்றொரு 25 வயது பெண் சொந்த ஊருக்கே திருமணம் முடிந்ததும், திரும்பி செல்ல, அவரது விவரங்கள் குறித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரை தனிமைப்படுத்தும் முயற்சியில் விருதுநகர் மாவட்ட அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அதேபோல் குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மணமகன் வீட்டாருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.