கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட வட கொரியாவிற்கு சீனா உதவி செய்யும் என சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள நிலையில் சீனாவின் அண்டை நாடான வட கொரியாவில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை. கொரோனா பரவ தொடங்கியதுமே நாட்டின் எல்லைகளை மூடி சர்வதேச பயணங்களுக்கு வடகொரியா தடை விதித்தது. இதன் காரணமாகவே மக்கள் கொரோனாவிற்கு ஆளாகாமல் பாதுகாக்க முடிந்ததாக வடகொரியா கூறுகின்றது.
ஆனாலும் சர்வதேச வல்லுனர்கள் வட கொரியாவிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருக்க வாய்ப்புகள் இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதனிடையே சீனா கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனிப்பட்ட முறையில் வாழ்த்து செய்தியை அனுப்பி பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் கிம் ஜாங் உன்னின் வாழ்த்து செய்திக்கு பதில் அளித்த ஜின்பிங் வட கொரியாவிற்கு கொரோனா அச்சுறுத்தல் இருப்பது கவலை அளிப்பதாகவும் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட சீனா வடகொரியவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.