தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது என மருத்துவ நிபுணர் குழு தகவல் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பலி எண்ணிக்கை 453ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 24,547 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மருத்துவ நிபுணர் குழுவினர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது என கூறியுள்ளனர். கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு குறையும் என கூறியிருந்தோம், அதுபோல் நடக்க உள்ளதாகம் இனி பாதிப்புகள் குறைய தொடங்கும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதை கவனித்து வருகிறோம். அதிகமாக பரிசோதனை செய்து வருவதால் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது, ஆனால் உயிரிழப்பை குறைக்க அதிக பரிசோதனை அவசியம். தமிழகத்தில் 60 வயதுக்கு மேல் உள்ள கொரோனா நோயாளிகள் தான் அதிகம் உயிரிழந்துள்ளனர் என்றும் நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் சிறுநீரக கோளாறு உடையவர்களும் கொரோனோவால் அதிகம் உயிரிழந்துள்ளனர் என அவர்கள் தகவல் அளித்துள்ளனர்.