நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சீனாவில் இருந்து தொடங்கி தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் இதுவரை 70க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.
இந்தியாவிலும் இதுவரை 31 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மார்ச் 31-ம் தேதி வரை பயோ மெட்ரிக் வருகைப் பதிவைப் பயன்படுத்தாமல், வருகைப் பதிவேடு மூலம் வருகைப் பதிவை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையில், நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இரு அவைகளையும் சேர்ந்த எம்.பிகள் அவர்கள் உடன் பார்வையாளர்களை அழைத்துவரக் கூடாது. பிற பார்வையாளர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஹோலி விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை நாடாளுமன்றம் தொடங்கவுள்ளது. அப்போதிலிருந்து இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.