இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ள நிலையில் 291 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன் கூட்டம் நிறைவடைந்த பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிரதமர் உள்பட எம்.பி.க்களின் சம்பளத்தில் 30% குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
30 சதவீதம் ஊதிய பிடித்தம் ஓராண்டுக்கு நீடிக்கும் என்று மத்திய அமைச்சரவை தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் ஊதியமும் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், ஆளுநர்களின் ஊதியம் 30 சதவீதம் குறைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கப்படுகிறது. இதன் மூலம் எம்.பி-க்களின் தலா 10 கோடி ரூபாய் நிதி அரசு நிதியில் சேர்க்கப்படும் . ஊதிய குறைப்பால் சேமிக்கப்படும் நிதி கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும் என்றும் இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.