கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அந்தமான் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு நேற்று விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்களுக்கு சான்றுகளை டிக்கெட் கவுண்டரில் ஆய்வு செய்து போர்டிங் பாஸ் வழங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த அந்தமானை சேர்ந்த கல்லூரி மாணவர் மெடம்சாமி என்பவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கொரோனா பரிசோதனை சான்றிதழ் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் தனது நண்பர்களுடன் தங்கி இருந்த மெடம்சாமிக்கு சளித்தொல்லை அதிகமாக இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்ததும், அதில் தோற்று உறுதியானதால் அந்தமானுக்கு செல்ல முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. அதன்பின் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மெடம்சாமியின் விமான பயணத்தை ரத்து செய்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவ்வாறு தொற்று பாதிக்கப்பட்ட பயணி வந்து சென்றதால் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.