சேலம் மாநகராட்சியில் கடந்த 21 நாளாக கொரோனா தொற்று இல்லாததால் பச்சை மண்டலமாக மாறுகிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 9,227 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் தினமும் கணிசமான அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டும் வருகின்றனர். தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23.58% பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை சிவகங்கை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் பச்சை மண்டலமாக இருக்கிறது. மேலும் நேற்றைய நிலவரப்படி கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திருப்பி உள்ளனர். இதனால் இந்த 2 மாவட்டங்கள் தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.
இந்த நிலையில் சேலத்தில் இதுவரை 35 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் அதில் 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 5 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர். மாநகராட்சியின் மேற்கண்ட நடவடிக்கையால் ஏப்., 23க்கு பின்னர் கடந்த 21 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.
இதனால் கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாநகராட்சி உருவெடுத்துள்ளது. இந்த தகவலை ஆட்சியர் சதீஷ் உறுதிசெய்துள்ளார். எனவே சேலம் மாநகரில் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள தடுப்புகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலம் மாநகராட்சியில் இதுவரை 3,077 பேருக்கு, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.