பாலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்கும் சல்மான் கான், கொரோனாவால் அச்சத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
பரவி வரும் கொரோனோவால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால், இந்திய திரையுலகம் முழுவதும் முடங்கி போய் உள்ளது. இதனால் அனைத்து மொழி நடிகர்-நடிகைகளும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். இதில் சிலர் நகரத்திற்கு வெளியே உள்ள தங்களது பண்ணை வீடுகளில் தங்கியுள்ளனர். அதேபோல சல்மான்கானும் தனது சகோதரர் மற்றும் மகனுடன் இணைந்து பண்ணை வீட்டில் தங்கியுள்ளார்.
அந்த வீட்டில் இருந்து அவர் வீடியோ ஒன்றை வெளிட்டார். அந்த வீடியோவில், நாங்கள் கொஞ்ச நாட்கள் இங்கு தங்கிவிட்டு செல்லலாம் என்றுதான் வந்தோம். ஆனால் இப்பொழுது இங்கு மாட்டிக்கொண்டு தவிக்கிறோம். மிகவும் பயத்தில் உள்ளோம். என்னுடைய தந்தையை பார்த்து மூன்று வாரங்கள் கடந்துவிட்டது, அவர் வீட்டில் தனியாக உள்ளார்.
பயந்தவன் இறந்து போவான் என்று திரைப்படத்தில் வசனம் ஒன்று இடம்பிடித்திருக்கும். அது தற்போது இருக்கக்கூடிய சூழலுக்கு பொருந்தாது என்பதை துணிச்சலாக நான் ஏற்றுக்கொள்கிறேன். இப்படிப்பட்ட சூழலில் யாரும் உங்களின் துணிச்சலை வெளிப்படுத்தாதீர்கள். நாங்கள் பெரும் அச்சத்தில் உள்ளோம் என சல்மான்கான் கூறியுள்ளார்.