தமிழகத்தில் குறைந்திருந்த தொற்றுப் பரவல் தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகின்றது. இதனால் மக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு சார்பில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இன்று தமிழகம் முழுவதும் மால்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள் என அனைத்திலும் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு பேருந்துகளில் நடத்துனர்களுக்கும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு பேருந்துகளில் டிக்கெட்டுகளை எச்சில் தொட்டு பயணிகளுக்கு தரக்கூடாது என நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் எச்சில் தொட்டு பயண சீட்டு வழங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து பயண சீட்டு வழங்கும்போது நடத்துனர் கண்ணீர் உறிஞ்சும் பாஞ்சை பயன்படுத்தி வழங்க வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.