Categories
உலக செய்திகள்

அழிவை சந்தித்து வரும் பவளப்பாறைகள்… விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை… வெளியான பரபரப்பு தகவல்..!!

பத்து வருடங்களில் உலக அளவில் 14 சதவீதம் பவளப்பாறைகள் பருவநிலை மாற்றத்தால் அழிந்துள்ளதாக விஞ்ஞானிகள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை திட்டான “தி கிரேட் பேரியர் ரீஃப்” ஆஸ்திரேலியாவின் வட கிழக்கு கடலோர பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. அவை தவிர கிழக்கு ஆசியா, பசுபிக் பெருங்கடல், தெற்கு ஆசியா, வளைகுடா பகுதிகள், மேற்கு இந்திய பெருங்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில் அதிக அளவில் பவளப்பாறைகள் காணப்படுகின்றன. ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பின் குழு கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட பரிந்துரையின்படி, புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் வெப்ப அலைகள் கடல்களில் அதிக அளவில் ஏற்படுகிறது.

இதனால் ஆஸ்திரேலியாவில் உள்ள தி கிரேட் பேரியர் ரீஃப் பவளபாறையை அழியும் நிலையில் உள்ள புராதான சின்ன பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே 300 விஞ்ஞானிகளின் சேர்ந்து உலகளாவிய பவளப்பாறை கண்காணிப்பு அமைப்பு சார்பில் பவளப்பாறைகளின் நிலை தொடர்பாக உலகின் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து அந்த அமைப்பு பவளப்பாறை தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கடந்த 2009 முதல் 2018-ஆம் ஆண்டு வரை மொத்தம் 73 நாடுகளில் உள்ள 12 ஆயிரம் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலக அளவில் 14 சதவீதம் அதாவது சுமார் 11 ஆயிரத்து 700 சதுர கிலோ மீட்டர் அளவிலான பவளப்பாறைகள் அழிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே விஞ்ஞானிகள் பலரும் புவி வெப்பமயமாதலை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் பவளப்பாறைகள் முற்றிலுமாக அழிந்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |